துவைக்காத ஆடை - குளிக்காத உடம்புடன் ஆலயத்துள் நுழைதல் கூடாது.
ஆலயத்துள் நுழையும் சமயம், கருவறையின் கோபுரத்தைக் கண்டு கைகூப்பி வணங்குதல் வேண்டும்.
உள்ளே சென்றதும், கொடிமரத்தைப் பார்த்தபடி ஓம் நமசிவாய என உச்சரித்தபடி வணங்க வேண்டும்.
அடுத்து விநாயகரைக் கண்டு, மூன்று முறை தோப்புக் கரணமிட்டு வணங்க வேண்டும்.
ஈஸ்வரனின் காவல் தெய்வமாக விளங்கும் துவார பாலகர்களை வணங்கிவிட்டு, சன்னதிக்குள் போக வேண்டும்.
ஈஸ்வரனின் முன்நின்று மந்திரங்களை ஜெபித்து அல்லது பாடல்களை மெல்லப்பாடி வணங்கி, தீபாராதனை முடிந்து, திருநீற்றை பெற்றணிந்து வணங்கிவிட்டு, கர்ப்ப கிரகத்தை மூன்றுமுறை வலம் வரவேண்டும்.
அவ்வாறு வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து, கண்களை மூடாதவாறு வணங்கிப் போகவேண்டும்.
பிறகு முருகப் பெருமானின் சன்னதிக்குச் சென்று வணங்க வேண்டும்.
சண்டிகேஸ்வரரை கை தட்டாமல் வணங்கி வலம் வந்து திரும்ப வேண்டும்.
துர்க்கையின் சன்னதிக்குச் சென்று மனதினுள் அவளை நன்றாகத் தியானித்து வணங்கிவர வேண்டும்.
நடராஜப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அவரை தலை முதல் பாதம் வரை ஏகாந்தமாகக் கண்டு வணங்கி வர வேண்டும்.
ஆலயத்தின் வெளிப் பிராகாரத்திற்கு வந்து அங்குள்ள 63 நாயன்மார்களையும் வணங்கியபடி மூன்றுமுறை வலம்வரவேண்டும்.
பிறகு அம்பாளின் சந்னிதிக்குப் போய், நான்கு முறைவலம் வந்து வணங்கி வரவேண்டும்.
இவ்வாறு தரிசனங்களை முடித்தபிறகு, பிரகாரத்தின் எங்கேயேனும் அமைதியான இடத்தில் சென்று அமர்ந்து, கண்களை மூடி சற்று நேரம் தியானம் செய்ய வேண்டும்.
நவக்கிரக வழிபாட்டிற்குப் போவோர், அது முடிந்ததும், மீண்டும் மூல ஸ்தானத்திற்குப் போய் சிவபெருமானை வணங்கி விட்டுத்தான் வரவேண்டும்.
கடைசியாக கோயிலை விட்டு வெளியேறும் முன்பாக கொடிமரம் உள்ள இடத்திற்கு வந்து, வடக்கு முகமாகப் பார்த்தபடி சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும்.
ஆலயத்தைவிட்டு வெளியே வந்ததும், மூலஸ்தான கோபுரத்தைப் பார்த்து கைகளை உயர்த்தி கும்பிட்டு தரிசனம் செய்துவிட்டு கிளம்ப வேண்டும்.
அச்சமயம் அங்கு காணப்படும் இயலாதோருக்கு இயன்ற அளவு தருமம் செய்துவிட்டு வீட்டுக்குப் புறப்படலாம்.
கோயிலினுள்ளே இருக்கும் சமயம், உட்காரும்போது சாமியின் முன் காலை நீட்டிக் கொண்டிருப்பதோ, முதுகைக் காட்டியபடி இருப்பதோ கண்டிப்பாகக் கூடாது.
ஆலயத்திற்குள் வேக வேகமாக ஓடிப்போய் கும்பிடைப் போட்டுவிட்டு வெளியே ஓடுவதும் கூடாது. அதற்குப் போகாமல் இருப்பதே மேலானது. கோயில் வளாகத்தில் தலை சீவுதல், முடி பின்னுதல் ஆகியவற்றை செய்யக் கூடாது. லுங்கி (கைலி) மற்றும் ஈரமான உடையுடனும் இருத்தல் கூடாது.
சன்னதிக்கும் - பலிபீடத்திற்கும் குறுக்கே போகக்கூடாது. அதேபோல மூலவருக்கும் நந்திதேவருக்கும் பூஜை, தீபாராதனைகள் செய்யப்படும் சமயம் குறுக்கே போவது, வருவது கூடாது.
சுவாமிக்கோ, நந்திதேவருக்கோ அபிஷேகம் செய்தவிக்கும் போது பிராகார வலம் போவது கண்டிப்பாகக் கூடாது.
சன்னதிக்குள் இருக்கும்போது வேகமாகக் பேசுவது, சிரிப்பது, செல்போன் பேசுவது ஆகியவற்றை செய்யக்கூடாது.
கையில் வாங்கும் பிரசாதத்தைப் பூசிக்கொண்டு, மீதியை கீழே கொட்டவும் கூடாது.
கோயிலில் படுக்கவோ, தூங்கவே கூடாது.
ஆலயத்துள் மோக உணர்வு கொள்வோருக்கு, மிகப்பெரிய பீடைகள் வந்து சேரும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக